பரனை நினைந்து பணி செய்க:
அறம் பொருள் இன்பம் வீடு என்பன பற்றி ஔவைப் பிராட்டியார் ஒரு வெண்பாவில் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத் தக்கது.
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
-ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64
நல்லோருக்கும் நற்செயலுக்கும் கொடுத்தலே அறமாகும்.
தீவினைவிட்டு நல்வழியில் ஈட்டுதலே பொருளாகும்.
எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பமாகும்.
பரனை நினைந்து அவனருளால் இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீடாகும்.
வீடு என்றால் விடுபடுதல். விடுதலையை மட்டும் ஔவையார் சொல்லவில்லை. இவ்வுலகைவிட்டால் உயிர் பெறுவது பேரின்ப வீடாகும் என்கிறார். இதனால்தான் வீட்டை, வீடுபேறு எனக் குறித்தனர் அறவோர்.
வீடு - துன்ப நீக்கம். பேறு - இன்ப ஆக்கம் என்கிறது சித்தாந்த சைவம்.
இப்பாடலில் பரனை நினைந்து என்பதே முக்கியமானது.
அவனன்றி அவனியில் ஒன்றும் அசையாதல்லவா?
எனவே பரனை நினைந்து ஈதலே அறம் எனப்படும்.
பரனை நினைந்தாலே தீவினைவிட்டு நல்வினைப்பட்டுப் பொருளீட்டும் செயல் நிகழும்.
பரனை நினைந்தாலே இன்பமும் எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுடன் நிகழும்.
பரனை நினைந்தாலே இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும்
No comments:
Post a Comment