Tuesday, 12 March 2024

வள்ளலார் வழி : காரணப்பட்டு ச.மு கந்தசாமி ஐயா அருள் வரலாறு

 காரணப்பட்டு ச.மு கந்தசாமி ஐயா அருள் வரலாறு 

1.நினக்கடிமை 

கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின்அருளால் 
வெள்ளைத்தை எல்லாம் மிகவுண்டேன்-உள்ளத்தே 
காணாத காட்சிஎலாம் காண்கின்றேன் ஓங்குகின்ற 
வாணா நினக்கடிமை வாய்த்து 
-ஆனந்த அனுபவம் திருவருட்பா-6 

2.அருட்பணி 

திசையெலாம் சென்று திருவருட் பாவை 
இசையெலாம் பெய்தே இசைத்திசைத் திருத்த 
பசையெலாம் ஆனக் காரணப் பட்டார் 
அசைவிலா நெஞ்சும் அசைத்திடும் பணிந்தே 
-வாள்ஒளி அமுத காவியம். 

"எப்பாரும் எப்பதமும் 'எங்கணும்நான் சென்றே எந்தை நினதருட்புகழை இயம்பியிடல் வேண்டும் "
என்ற வள்ளற்பெருமானின் இலக்கிய வரிகளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ச.மு-கந்தசாமிப்பிள்ளை. வள்ளலார் புகழ்பாடும் இந்த உத்தியோகத்தை இவருக்குப் பெருமானே உவந்து கொடுத்தருளினார் என்றால் இவரின் உணர்வினையும் உயர்வினையும் என்னென்று வைப்பது; ஆம் இவருக்கு வந்த பிணியால் இவருக்குத் தந்த பணி இது. 

3.பிறப்பும் சிறப்பும்: 

கந்தசாமியார் கடலூர் வட்டத்தில் உள்ள "காரணப்பட்டு” என்னும் ஊரில் 1836 இல் பிறந்தார். இவரின் பாட்டனார் சந்திரசேகரனார் பெருஞ்செல்வந்தர். அறுபது காணி நிலத்துக்குச் சொந்தக்காரரும் கூட கந்தசாமியின் தந்தையார் முத்துசாமி. இவர் கணக்கு வேளை பார்த்து வந்தார். இவரின் துணைவியார் தயிலம்மாள். 

4.படிப்பும் பணியும்: 

இளம் வயதில் இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். எண்ணறக் கற்றவர். எழுத்தற வாசித்தவர். கணக்கு வேலை பார்ப்பதற்கு உரிய படிப்பும் படித்திருந்ததினால் புதுவை மாநிலத்தில் "பாகூர்" என்னும் ஊரில் கணக்கு வேலை கிடைத்தது. அதனை ஒழுங்குறச் செய்து கொண்டே மேன்மேலும் படித்தார். அதனால் பின்னர் புதுச்சேரியில் உள்ள சாரம் என்னும் பகுதியில் சுங்கச் சாவடியில் வட்டாட்சியர் பணியினை ஏற்றார். பணியினைத் திறம்பட ஆற்றினார். 

5.மனைவியும் மகளும்: 

மணப்பருவம் வந்துற்றது. இல்லறப்படுத்தி மகிழ்வுற எண்ணிணார். தக்கப் பெண் அணங்கினைத் தேடினார். கந்தசாமிக்குச் சீர்காழியிலிருந்து "தங்கம்" என்ற பெண்ணைப் பார்த்துப் பேசி நல்வாழ்க்கை துணைவி ஆக்கினார். அவரும் அவரோடு இணங்கி நல்லறப்பாங்கில் ஒழுகினார். அதன் பயனாக பெண் மகவு பிறந்தது. 'ஜானகி" என்று பெயர் இட்டுச் செல்லமாக வளர்த்து வந்தார். 


கந்தசாமியார் பெற்ற கல்வியறிவோடு ஞான அறிவும் நிரம்ப பெற்றவர். சைவ ஆகம சித்தாந்த நூல்களை எல்லாம் முறையாக கற்றவர் சிவபூசை நாள் தவறாமல் நியமப்படி ஒழுகி செய்து வந்தார் செபதபம் செய்தார். 

6.பண்ணை வேலையில் ஆர்வம்: 

வழிவழியாக உழவுத்தொழில் குடும்பம் ஆனதால் அதன் வேலைகளிலும் ஆர்வம் குன்றாமல் செயற்பட்டார். உரிய காலத்தில் பயிர் செய்து பயன்பெறுவதிலும் கவனம் செலுத்தினார். வருவாய் ஈட்டுவதிலும் மற்றவர்க்குக் கொடுத்து மகிழ்வதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பண்ணையில் வேலை செய்யும் ஏழை எளியவர்களிடம் அன்பு கொண்டு தாராளமாக உதவி செய்து வந்தார். 

7.பலரோடு தொடர்பு

கல்வியறிவில் சிறந்த சான்றோர்கள் பலரும் அவரை நாடி வந்து பழகினார். அவரும் பலரைநாடிச் சென்று நட்பு கொண்டிருந்தார். உலகியல் வல்லரோடும், அருளியல் நல்லவரோடும் அவருக்கு இடையறாத தொடர்பு இருந்து கொண்டிருந்தது. அதனால் ஊராரோடும், அடுத்த அயலாரோடும் அவருக்கு நெருக்கமான அன்பும் தொடர்பும் இருந்தது. 

8.மயக்கமும் தயக்கமும்: 

இவ்வாறு இருக்கும் நாளில் இவருக்கு பித்தம் அதிகரித்து தலை சுற்றலும் மெய்ந்நடுக்கமும் ஏற்ப்பட்டது. தலை ஆட்டமும் உடல் ஆட்டமும் ஓயாமல் இருந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்த வேண்டி விரும்பி நிரம்பப் பொருட் செலவு செய்தார். நரம்பிய கோளாறு என்று குறிப்பிட்டனர். அதைச் சரி செய்ய வல்ல மருத்துவர்களை நாடினார். அவர்கள் சொன்ன மருந்துகளை எல்லலாம் உண்டார். தடவச் சொன்னவற்றை எல்லாம் தடவிப் பார்த்தார். 

ஒருவர் அல்லாமல் பலரையும் நாடிப் பார்த்தார். எவராலும் அந்நோயினை நிறுத்த இயலவில்லை. செய்வதறியாமல் திகைத்து எதுவும் செய்ய இயலாதொரு தயக்கமும் அவருக்கு ஏற்பட்டது. எண்ணாததெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கினார். ஏன் தனக்கு இந்த நிலை விளங்காமல் மயங்கினார். 

9.நம்பிக்கை மொழிகள்: 

ஒரு நாள் இவர் வீட்டிற்குப் பெரியவர் ஒருவர் வந்தார். இவர் நிலை கண்டு வினவினார். இவர் தமக்குள்ள நோயின் தன்மை எடுத்துரைத்தார். என்னென்ன செய்தார்? யார் யாரைப் பார்த்த என்னென்ன செய்தனர் என்பதை விளக்கமாக சொன்னார். அது கேட்ட அப்பெரியார் வடலூரில் வள்ளற்பெருமான் இருப்பது பற்றிய அவர் பலருக்கு பல்வேறு பரோபகாரங்கள் செய்து கொண்டிருப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். அவர்பால் சென்றால் இவ்வுடல் நடுக்கமும், தலை ஆட்டமும் மாறும்; நிற்கும்; உடன் குணமாகும் எனவும் மொழிந்தார். அம்மொழிகள் அவருக்குப் பசித்தவனுக்கு பாற்சோறு வாய்த்தது போல் இருந்தது. உடனே அவர்பால் சென்று நலம் பெற எழுந்தார். 

10.வள்ளைலை நோக்கிப் பயணம்: 

தானமும் தர்மமும் தக்கவார்க்குத் தக்கபடி செய்யும் இயற் பண்புகள் வாய்க்கப் பெற்ற காரணப்பட்டுக் கணக்குப் பிள்ளை வீட்டு மாட்டு வண்டி மேட்டுக்குப்பம் நோக்கிப் பயணப்பட்டது சோறாக்கும் அரிசி, பருப்பு, புளி, மிளகாய், எல்லாம் வேண்டியவாறு எடுத்துக் கொண்டனர். தருமச்சாலைக்குச் சென்று நின்றது வண்டி. பொருள்களை இறக்கிவிட்டு மேட்டுக்குப்பம் வழிபிடித்து மீண்டு புறப்பட்டது வண்டி .

11.பெருமான் நோக்கும் பிணியின் போக்கும் 

அண்டகோடிகளேல்லாம் விரும்பி அருகில் சென்று வணங் தக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராம் வள்ளலைக் கண்டிட்டார் 
கந்தசாமியார் சிந்தை தெளிந்து கண்ணீர் சிந்திட்டார். கைகள் தலை மீது குவிய கால்கள் தள்ளாட அடியற்ற மரம்போல் வள்ளல் திருவடிகளில் விழுந்து வணங்கினார். 

பெருமான் திருநீறு தந்திட்டார். உடல்பெலாம் பூசப்பணித்திட்டார். அவ்வாறே கந்தசாமியார் திருநீற்றைப் பெற்று உடல்பெலாம் பூசினார். என்ன வியப்பு! அவருக்கு அல்லல் தந்து வந்த மயக்கம் மாய்தது. உடல் நடுக்கமும் தலை சுற்றலும் ஓடியது. 

இத்தகு அருஞ்செயல் புரிந்த பெருங்கருணை நிதியாகிய வள்ளபெருமானை வாயார வாழ்த்தி வணங்கி நின்றார் கந்தசாமி. நஞ்சாரப் புகழ்ந்து விழி நீர் சிந்தியது. அவர் நிலை கண்டு அப்போது நம்பெருமான் "உமக்குத் தக்க உத்தியோகம் தருவோம்" என்று உரைத்து வெளீயீடு கண்டிருந்த திருவருட்பா திருமுறைகள் படி ஒன்றினைத் தந்தருளினார். உடன் ஊர் திரும்பிச் செல்லவும் உத்திரவு தந்தார். 

12.துறவும் உறவும்: 

கந்தசாமியார் உளம் மகிழ்ந்தது உடல் தெளிந்து ஊர் திரும்பினார். ஆனால் அங்கு சென்ற அவர் உள்ளம் திரும்பவில்லை. திருஅருட்பா சிந்தை கவர்ந்தது. ஓத ஓத உள்ளம் குழைந்தது. வள்ளற் பெருமான் முன் இருந்து பாடுவதை போல் உணர்வு இருந்தது. நாட்டமெல்லாம் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை முன் இன்றது. வள்ளல்பால் சித்திவளாகத் திருமாளிகை முன் நின்றது. வள்ளல்பால் சென்றது இவர் எண்ணமெல்லாம் பெருமானையே பலம் வந்து கொண்டிருந்தது. 

எனவே இவர் துறவு பூண்டு குடும்பத்தை விட்டு நீங்கி மேட்டுக்குப்பத்திற்கு வரத்துணிந்தார். இதுப்பற்றி குடும்பத்தில் தெரிவித்தார். குடும்பத்தார் பெரிதும் கலங்கினர். இவர் செல்வதற்கு முன்னர் குடும்பத்தினர் மேட்டுக்குப்பம் சென்றனர். வள்ளற்பெருமானிடம் கந்தசாமியார் நிலை குறித்து முறையிட்டனர். 

பெருமான் "உலகம் பிரமிக்கத் துறவு பூண வேணாங்காணும்; அருந்தல், பொருந்தல் முதலிய ஜீவகாருண்யமுள்ள சமுசாரிகளாகிய இல்லறத்தார் எல்லாம், அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளுக்கு நூற்றுக்கு நூறு பங்கு முழுவதும் உரியவர் ஆவார்கள் இது பொய்யன்று" என்று கூறியருளிக் குடும்பத்தில் சேர்ந்து வாழ வழிகாட்டினார். பெருமான் வாக்கினைத் தலைமேற் கொண்டு சென்றிட்டார் கந்தசாமியார். அவ்வாறே காரணப்பட்டுக்குச் சென்று குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார். பெருமான் நினைவாகவே இருந்து வந்தார். இவர் உள்ளமாகிய இரும்பு பெருமானாகிய காந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது. சில நாட்கள் சென்றன இவரின் துணைவியர் தங்கம் உயிர் நீத்தார். 

13.வடலூரில் தங்கல்: 

அவர் மனம் எல்லாம் வல்ல வள்ளற் பெருமானுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பியது . அதனால் வீட்டாரிடம் சொல்லிக் கொண்டு அவர் தம் ஒரே மகள் ஜானகியையும், அழைத்தக் கொண்டு வடலூர் வந்து சேர்ந்தார். ஒரு குடில் அமைத்தக் கொண்டு அதில் தங்கினார். சங்கப்பணிகளிலும் சாலைப்பணிகளிலும் அன்பர்களோடு சேர்ந்து ஈடுபட்டார். மேட்டுக்குப்பத்தில் பெருமானைக் கண்டு வணங்கி வழிபட்டு நியமங்களைக் கடைப்பிடித்தார். 

14.திருவடிவப் புகழ்ச்சி: 

அன்று சித்திவளாகத்தில் வழிபாடு நடந்தது. பெருமான் முன்னிலையில் அன்பர்கள் கூட்டு வழிபாடு செய்தனர். கந்தசாமியார் இசையோடு திருவடிப்புகழ்ச்சியைப் பாடினார். வள்ளற் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டு ஒழுகியதால் நெகிழ்ச்சியோடு அப்பாடல் ஒலித்தது. இசையறிவு தனக்கு மிகுதியும் உள்ளது என்னும் கருத்து அவருள் பதிந்திருந்தது அதனை உணர்ந்த வள்ளல் அத்திருவடி புகழ்ச்சியைப் பல இசைகளில் பாடிக்காட்டி மகிழ்வித்தார். அது கண்டுதிகைத்தார் கந்தசாமி. இப்படியெல்லாம் பாடமுடியுமா என் வியந்தார். 

15.சன்மார்க்கத்தில் இசைக்கருவிகள்: 

இசைஞானம் மற்றவர்களைவிடக் கூடுதலாகவே கந்தசாமியாரிடம் இருந்தது. அருட்பாவைப் பாடப் பாட அது மிகுந்த பல இராகங்களில் பல உருப்படிகளில் அது வெளிப்பட்டது. பாட்டுக் ஏற்றபடி கருவிகள் கொண்டு பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கு என்று நம்பினார். நண்பர்கள் துணை கொண்டு பலகருவிகள் இசைத்துக் கொண்டு பாடவும் முனைந்தார். அதுகண்டு வள்ளற் பெருமான் கந்தசாமியாரைத் தன் முன்னிலைக்கு அழைத்து  மனங்கசிந்துருகவே பாடல் பாடவேண்டும் இசைக்கருவிகள் கொண்டு பாடுவதால் மனம் உருகாது, உணர்ச்சி பெருகாது, சன்மார்க்கத்திற் இசைக்கருவிகள் தேவையில்லை இல்லாமலே மனம் உருக பாடி வழிபடுங்கள் என்று விளக்கியருளினார். எவ்வெப்பாடல்களை எப்படி எப்படிப் பாடவேண்டும் என்றும் சொன்னார். 

இறைவனின் நிறைபுகழையும் நம் குறை இழிவினையும் வகைப்படுத்திக் தெளிவாக பாட வேண்டும் என்பதைய உணர்த்திட்டார். 

16.சமரச பஜனை: 

சமய மதங்களுக்கிடையே சமரசம் காண்பதே சன்மார்க்கம். எனவே வழிபாடு சமரசமாகவே இருக்க வேண்டும் அல்லவா? கந்தசாமியார் சமரச பஜனை பாடவே விரும்பினார். பொது நோக்கம் அப்பொழுதுதான் உண்டாகும். எல்லோரும் விரும்புகின்ற பாடலையே பாடினார், அதற்குச் சமரச பஜனை என்று பெயரிட்டார் அன்பர்கள் பலரையும் அச்சமரச பஜனை வழிபாட்டில் ஈடுபடுமாறு அழைத்தார். உணர்ச்சி பொங்கப்பாடிப் பரவினார், பாடுகையில் அவரும் உருகினார். பிறரையும் உருகச் செய்தார். 

17.வழிபாட்டுப் பொறுப்பு: 

பெருமான் திருக்காப்பிட்டுக் கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, அன்பர்களையெல்லாம் அழைத்தார், 
சாலைப் பொறுப்பை கல்பட்டு ஐயா பார்த்துக்கொள்ள வேண்டும். சங்கப்பொறுப்பைத் தொழுவூரார் பார்த்துக்கொள்ள வேண்டும், 
வழிபாட்டு பொறுப்பை கந்தசாமியார் பார்த்துக் கொள்ள வேண்டும், சித்திவளாக விளக்குப்பார்க்கும் பொறுப்பை சேலத்து ஞானாம்பாள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டருளினார். 

கந்தசாமியாருக்கு வழங்கிய பொறுப்பை மிக ஒழுங்காக நடத்தி வந்தார். அவரும் சாலையில் செய்யும் வழிபாடு எப்படி செய்வது, வலம் வருங்கால் எங்கெங்கு நின்று என்னென்னப் பாடல்கள் வேண்டும், என்றெல்லாம் வகுத்துக் கொண்டு அன்பர்களோடு சேர்ந்து சமரச பஜனையாக அவ்வழிபாட்டை நடத்தி வந்தார். 

18.தமிழகப் பயணம்: 

வள்ளற் பெருமான் சித்திவளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டுக் கொண்டு மறைந்து எல்லா உயிர்களிலும் புகுந்துகொண்டருளினார். இவரோ தமிழக முழுவதும் சன்மார்க்க சங்கங்களை அன்பர்களை பல ஊர்களிலும் நிறுவினார். கொடியேற்றி வைத்து கொள்கைகளை விளக்கினார். ஒவ்வோர் ஊரிலும் சமரச பஜனை செய்தார். தன் மகள் ஜானகியையும் பஜனைக் குழுவில் இருந்து கொண்டு பாடச் செய்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் சங்கங்கள் தோன்றின வழிபாடுகள் தோன்றின. அன்னதான அமைப்புகள் தோன்றின வடலூரோடு அனைவரும் தொடர்பு கொண்டு இருக்கவும் செய்தனர். சாலைக்குப் பொருள்கள் கொண்டு வந்து தந்தனர். ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்பட்டது. 

19.கண்நோய் நீக்கமும் பிரபந்தங்கள் பாட உத்தரவும்: 

காரணப்பட்டு கந்தசாமிபிள்ளை கண்வலியால் துன்பப்பட்டார். வடலூர் செல்லும்படி கனவில் வள்ளல் உத்தரவானது. அங்ஙனமே செல்ல ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணுக்கு கட்டும்படி ஓர் அன்பர் கூறினார். அங்ஙனமே செய்ய கண்நோய் அகன்றது திருக்கோயிலூரில் கந்தசாமியார் தங்கியிருந்தபோது கனவில் வள்ளற் பெருமான் தோன்றி அந்தாதி, நாமாவளி, கண்ணி முதலிய பிரபந்தங்கள் பாடும் படியும் உத்தரவாகியது. 

20.வரலாற்று நிகழ்வுகளைத் திரட்டுதல்: 

தொழுவூரார் கல்பட்டு ஐயா, முதலிய பெருமான் மாணவர்களிடம் நெருங்கிப் பழகிய புலவர்கள், சான்றோர்கள் அன்பர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் வள்ளற்பெருமால் பற்றிய நிகழ்வுகளை செய்திகளைக் குறித்து அறிந்து ஆராய்ந்தார் குறித்துக்கொண்டார். 

21.சரித்திரக் கீர்த்தனை: 

தமக்குத் தெரிந்த பிறரால் தெரிந்து கொண்ட நிகழ்வுகளையெல்லாம் தொகுத்தார். அதனைக் கீர்த்தனைகளாக பாடினார். "ஸ்ரீமத் திருவருட்பிராகச வள்ளலார் திவ்ய சரித்திர கீர்த்தனை” என்று பெயரிட்டார். இதல் 261 கண்ணிகள் உள்ளன இது ஒரு புதிய முயற்சி. இத்தகு இசைப்பாடல்கள் இதுகாறும் தமிழில் எழுதப் பெறவில்லை. இவர்தான் எழுதி ஊர்கள் தோறும் இசையோடு பாடி அன்பர்களுக்கு பெருமான் வரலாற்றினை வழங்கினார். அதை தொடர்ந்து பிள்ளை பெருமான் தோன்றாத் துணையாய் செய்தருளும் திருவிளையாடல் 24 கண்ணிகளாய்ப் பாடி பரவசப்படுத்தினார். 

22.சற்குரு வெண்பா அந்தாதி: 
தொடர்ந்து 1008 வெண்பாக்கள் பாடி வாழ்த்தும் பாடியுள்ளார். இதற்கு முன் நீண்ட நூல் தமிழில் இதுகாறும் உண்டாகவில்லை இவர்தான் பாடியுள்ளார். 
மற்றவை: 
மேலும் குருநேச வெண்பா 221 
கொலை மறுத்தல் 65 
அருட்பிரகாசர் அற்புத அந்தாதி 104, 
வடற்சிற்சபை மாலை 29 
அருட்பிரகாச அற்புத மாலை32, 
திருவருட்பிரகாசர் வருகை பல்லவி நன்னிமித்தம் பராவல் 96, 
அருட்பிரகாச வள்ளலார் விபூதிபிராசாத மகிமை 43, 
கிகி(ளி)க்கண்ணிகள் 65, 
இயற்கை உண்மை 224 
புலம்பற்கண்ணி 266, 
ஆக 18 நூல்கள் பெருமான் மீது பாடி மகிழ்ந்துள்ளார். 

23.திருவருட்பா வெளியீடு: 

அருட்பாக்களை அழகுறபாடி ஆழங் கால்கண்டவர். அதனால் பதிப்பித்து வெளியிட விரும்பினார். ஆறுதிருமுறைகளையும், உரைநடைகளையும், ஒரே நூலாக ஆக்கி அச்சிட்டார், தீ.நா முத்தையா சட்டியார் பேருதவியால் 1924ம் ஆண்டு வெளியிட்டார். முன்பே அவர் பாடிய பிரபந்தத் திரட்டும் அவர் பார்வையில் 1923 ஆம் ஆண்டு வெளியானது. இந்நூல்கள் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் இலவசமாகவே வழங்கி மகிழ்ந்தார். 

24.நிறைவு: 

இளம் வயதிலேயே பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு அறுபது பூண்டுகளுக்கு மேலாக் திருவருட்பாத் தேனின்பத்தை துய்த்து அதனை பலருக்கும் ஊட்டி உவகையுறச் செய்த இவர் 2-12-1924 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். காரணப்பட்டில் இவர் உடல் அடக்கக் கல்லறை உள்ளது. 

No comments:

Post a Comment