Friday, 8 March 2024

வள்ளலார் வழி : கட்டமுத்துப்பாளையம் நாராயணர் அருள் வரலாறு

வள்ளற் பெருமானாரின் வழி வழித் தொண்டர்கள் 

கட்டமுத்துப்பாளையம் நாராயணர் அருள் வரலாறு 


1.வளாகத்தில் வழிபாடு 

மேட்டுக்குப்பம்: அண்ட கோடிகள் அனைத்தும் வணங்கிப் போற்றும் சித்திவளாகம். அங்கே ஞானசிங்காதனப் பீடத்திற்கு ஆராதனை நடந்து கொண்டிருந்தது; அன்பர்கள் பேரார்வத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாடிப்பணிந்து வழிபட்டுக் கொண்டிருந்தார்கள்; தன் வசம் இழந்து கண்ணீர் பெருக்கி, கசிந்து, நின்று கொண்டிருந்தார்கள். 

ஆராதனைக்குக் கட்டாயம் வந்து கொண்டிருந்தார் வள்ளற்பெருமான். அன்றைய தினம் வழிபாடு தொடங்கியும் பெருமானைக் காணவில்லை; ஆனாலும் அன்பர்கள் உணர்வுப் பெருக்குடன் ஒருமித்த கருத்துடன் தரிசனம் செய்து கொண்டிருந்தார்கள். 

2.அன்பரின் மனநிலை 

அத்தருணம், கூட்டத்தில் ஓரன்பர் ஓரமாக ஒதுங்கி நின்று வழிபட்டுக் கொண்டிருந்தார். எட்டி எட்டி ஆராதனையைக் கண்ணு பரவசமானார். கைகளை உச்சியின் மீது குவித்த படி உணர்வுமயமாய் நின்றார். முன்வந்து நன்றாக தரிசனம் செய்ய அவருக்கு நேரிடவில்லை. அப்படிச் செய்ய அவர் விரும்பவுமில்லை.

3.முன் வந்து தரிசியும் காணும்: 

அப்போது வெளியில் சென்றிருந்த நம் பெருமான் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழிபாட்டுக் கூடத்தில் திருமலரடிகளை எடுத்து வைத்தார்கள். அவ்வளவுதான் "ஏன்காணும் இப்படி ஒதுங்கி நின்று தரிசிக்க வேண்டும்? நன்றாக முன்வந்து தரிசியும் காணும்" எனத் திருவாய் மலர்ந்தருளி ஒதுங்கித் தரிசனம் செய்த அன்பரின் கைகளைத் திருக்கரங்களினால் பிடித்துக் கொண்டார்கள். முன்வரும்படி அழைத்தருளினார்கள். 
உடன், வள்ளற்பெருமானின் தெய்வத் திருக்கரங்களால் தீண்டப்பெற்ற அவருக்கு உச்சியைப் பிடித்து உலுக்குவதுபோல் இருந்தது; உடல் எல்லாம் சிலிர்த்துப் போனார்; தன்னை அறியாமல் தாரையாக் கண்ணீர் சிந்தினார்; சோபம் மீதுறப்பெற்றார்; வேரற்ற மரம் போல விழுந்து வணங்கினார். 


4.விம்மிதம் அடைந்தார்: 

"ஆகா! சுத்த தேகம் பெற்றவர்கள் நம்பெருமான்; பிரணவ தேகம் பெற்றவர்கள் நம் ஐயா; ஞானதேகம் பெற்றவர்கள் நம் அடிகள்; அவர்களின் அற்புதத் திருக்கரங்களால் தீண்டப் பெற்றால் நமக்கு எவ்வகை உணர்ச்சி உண்டாகும் என்று எப்போதோ நினைத்தோமே! அது இன்று இப்போது இப்படி நடந்துவிட்டதே; எனது பாக்கியமே பாக்கியம்!", என விம்மிதம் அடைந்தார். சொல்ல ஒண்ணாமல் நாதமுதழுத்தார்; "ஆண்டவனே ஆண்டவனே” என்று வாய்க் குழறினார். 

5.யார் அவர்? 

அவர்தான் கட்டமுத்துப்பாளையம் நாராயணர். கல்பட்டு ஐயாவின் சீடரான சுப்புராயர் தேர்ந்தெடுத்த செல்வமணி; வடல் வெளியில் சாலைப் பணிகளை மாண்புடன் நடத்திய வளர்மணி. சத்தியதருமத்தைப் பல்லாண்டுகள் பாங்குடன் நடத்திய பால்மணி. 

திருநறுங்குன்றத்திலிருந்து சாலைப் பணிகளுக்கு என வந்து சேர்ந்தார் கல்பட்டு ஐயா; தெலுங்கு தேசத்திலிருந்து அதற்கெனவே வந்து சேர்ந்தார் சுப்புராயர்; தென்னார்க்காடு மாவட்டம் பண்ணுருட்டிக்கு அடித்த கட்டமுத்துப்பாளையத்திலிருந்து அப்பணிகளைத் தொடர்ந்திட வந்து சேர்ந்தார் நாராயணர். அவ்வாறு வெளியிடங்களில் இருந்து வந்து நிலையான பணிகளை மேற்கொண்ட தொண்டர் பரம்பரையைச் சார்ந்தவரே நாராயணர். 

6.இளம் பருவம்: 

7-10-1855ல் பிறந்திட்டார். இளம்பருவத்தில் குடும்ப அலுவல்களில்ஈடுபாடில்லை. உழவினையோ-வேளாண்மையையோ கவனிக்கவில்லை. அடிக்கடி கண்டரக்கோட்டைப் புலவனூர்க்குச் செல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். 

சோதிடர்கள்பாலும், மந்திரவாதிகள் பாலும் அக்கறை; சோதிடம் பயில, மந்திரம் பயில நாட்டம், ஆதலின் விவசாய வேலைகளில் இல்லை ஈட்டம். 
திருமணம் ஆனால் குடும்ப அலுவல்களில் ஆர்வம் உண்டாகும் எனப் பெற்றோர் தீர்மானித்தனர். “தைலம்மை" என்னும் நல்லம்மையை மணம் புரிவித்தனர். குடும்ப ஈடுபாடு சீராக வளர்ந்தது நான்கு பிள்ளைகள் பிறந்தனர். 

ஆனாலும் மந்திர தந்திர சோதிடக்கலைகளில் ஈடுபாடு நின்றபாடில்லை அத்துடன் நன்கு தரிசனம் செய்யும்படி அறிவுறுத்தினார்கள். புலவனூர்க்குச் சென்று வருவதும் குறைந்தபாடில்லை 

7.நம்பெருமான் எழுந்தருளல்: 

புலவனூரில் கருணீகர் மரபினரிடை சங்கடம் ஒன்று தோன்றியது அதனைப் பெருமானிடத்து வந்து விண்ணப்பம் செய்தனர். புலவனூருக்குப் பெருமான் எழுந்தருளினார்கள் மரபினரிடை தோன்றிய மாற்றங்களை நீக்கி அமைதி செய்வித்தார்கள். அத்தருணத்தில் நம்பெருமானைக் கண்டு தன்வயம் இழந்தவரானார் நாராயணர்.
 
வந்த அலுவல் முடிந்து வடல்வெளிக்குத் திரும்பிச் கொண்டிருந்தார்கள் வள்ளல். அப்போது கட்டமுத்துப் பாளையம் நாராயணர் இல்லத்தில் 2, 3 நாழிகை தங்கினார்கள். அவ்வளவே நாராயணர் அதுமுதல் நம்பெருமானனுக்கு மீளா அடிமையானார். 

8.பேரின்பப் பெருவாழ்வு: 

நம்பெருமான் சத்திய தருமத்தாலும், ஜீவகாருண்யக் சீலத்தினாலும், கொல்லாமை என்னும் குருஅருள் நெறியாலும் பேரின்பப் பெருவாழ்வினைப் பெற்று ஒளிர்ந்திட்டார்கள். 
இம்மை இன்ப வாழ்வினும் ஏற்றமுடையது மறுமை இன்ப வாழ்வு; மறுமை இன்ப வாழ்வினுப் மகத்துவ முடையது பேரின்ட வாழ்வு பேரின்ப வாழ்வினைப் பெற்றவர் சுத்த பிரணவ ஞானதேங்களை ஒருசேரப் பெற்று ஓங்கி நிற்பார்கள். அவர்கள் கடவுள்தான் என்பதனைக் கேட்டறிந்தார். நம்பெருமானிடம் கண்டறிந்தார். 

அப்போதுதான் "நம்பெருமானின் தூயதேக திருக்கரங்கள் தம்மீது பட நேர்ந்தால் எவ்வாறு இருக்குமோ" என ஏக்கமுற்றார் அவரது அப்பழுக்கற்ற ஏக்கத்தினை தான் அன்றைய வழிபாட்டில் கைபிடித்து அழைத்துக் தீர்த்தருளினார்கள் வள்ளல். 

அப்படித்தான் 'நம்பெருமானுக்கு உணவு படைத்து உபசரிக்க வேண்டும்' என ஏக்கமுற்றார் ஊத்தங்கால் மங்கலம் கேசவரெட்டியார். அதன்படியே ஒருநாள் அவரது இல்லத்திற்கு எழுந்தருளி ஏக்கம் விர்த்த ஏந்தலாகி விளங்கினார்கள் நம் பெருமான். 

9.வடல்வெளி வாழ்வு: 

மூத்தமகன் குடும்பப் பொறுப்பினைக் கவனிக்கும் நிலைக்கு வளர்ந்திட்டான். அவனுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்து வைத்தார் நாராயணர். குடும்ப அலுவல்களை அவனிடம் ஒப்படைத்தார். தான்மட்டும் வடல்வெளிக்கு அடிக்கடி வந்து போகும் பழக்கத்தினை மேற்கொண்டிருந்தார். அப்போதுதான் தெலுங்கு தேசத்துப் பெரியவர் சப்புராயரின் பழக்கம் உண்டாயிற்று. இவ்வாறாகச் சாலைத் தொண்டுக்கு நாராயணரை ஆட்படுத்தும் நிகழ்வுகள் நடந்தவண்ணமிருந்தன. 

10.உகந்த பணி: 

சுப்புராயர் தொடர்பினால் கட்டமுத்துப்பாளையத்தில் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது நாராயணர் அதற்கு ஆசானாய் அமர்ந்தார். தமிழும் தெலுங்கும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்பட்டது. இடையிடையே சுப்புராயர் பள்ளிச் செயல்பாடுகளைச் கவனிக்கச் சென்று வந்தார். 

ஆனாலும் உத்தம தருமம், சத்திய தருமமும், கடவுள் கற்பித்த உண்மைத் தருமமும், பசி நீக்குதலும், கொலை நீக்குதலுமே என்பதனைத் தேர்ந்து உணர்ந்தார். முடிவில் வடல்வெளிக்கு வந்து சாலைப் பணிகளை மேற்கொள்ளவே நாராயணர் விரும்பினார்; ஆதலின் பள்ளிப் பணிகளைப் பிறரிடம் ஒப்படைத்து உத்தர ஞான சிதம்பரத்திற்கே வந்து விட்டார்; உடல், பொருள், உயிர் முழுவதும் சாலைப்பணிகளுக்கு என ஒப்புக் கொடுத்தார்; அவ்வாறு ஆன்ம நேயச் சீலராய்ப் பரிணாமம் பெற்றுக் கொண்டிருந்தார். 

11.சிதம்பர சுவாமிகள் செய்தி: 

இராமலிங்க சுவாமிகள் திவ்விய சரித்திரத்தை வரைந்தவர்கள் பிறையாறு சிதம்பர சுவாமிகள். அவர்கள் சன்மார்க்க உலகில் கலங்கரை விளக்கெனத் திகழ்ந்தவர்கள்.

 அவர்களோ "ஒருகால் கட்டமுத்திப் பாளையத்திலிருந்து நாராயண ரெட்டியார் என்னும் அன்பர் மேட்டுக்குப்பம் வந்தார். சுவாமிகளைத் தரிசித்தார். சிலநாட்கள் தங்கியிருந்தார். 
அப்படியிருக்குங்கால் தம்மேல் சுவாமிகள் பரிசம்பட்டால் எப்படி இருக்குமோ என்று அவா உடையவராய் தங்கியிருந்தார். 

அப்போது வெளியிலிருந்து வந்து சேர்ந்த ஐயா அவர்கள் நாராயண ரெட்டியாரை "தீபாராதனையைத் தரிசியும்" என்று கைகளைப் பற்றி சந்நதிக்கெதிரில் விட்டார்கள். 
உடனே உவகை பூத்த உள்ளத்தினராய் பெருமானைத் தரிசித்துப் பேரானந்தம் அடைந்தார். 

அந்த நாராயண ரெட்டியார் அவர்களே சாலையில் நீண்ட நாள் கல்பட்டு ஐயாவுக்குப் பின் அவர் மாணாக்கராயிருந்து அவர் ஆணைப்படி சத்திய தருமச் சாலையை நடத்தி வந்த தெலுங்கு தேசத்து சந்நியாசியாகிய சுப்புராய சுவாமிகளுக்கு உறுதுணையாகி நின்றார். 

மேலும் சென்ற பிரபவ வருடம் வைகாசி 11 ஆம் தேதி சுமார் 37 வருடங்களுக்கு முன் சாலைக் கட்டடத் திருப்பணி வேலையை முடித்து பிரவேச விழா நடத்தி ஆண்டவர் அருளுக்குப் பாத்திர ஆனார். 

மேற்படி ரெட்டியார் அவர்கள் பெருமான் திருக்கரத்தால் பரிசிக்கப்பெற்ற பேற்றினை அன்பர்கள் விசாரிக்குந்தோறும் வள்ளல்பால் மாறாத அன்புடையவராய் அந்நிகழ்ச்சியைப் பற்றிக் கூறி அகம் நெகிழ்ந்து உருகி ஆனந்த பரவசராய் சூழந்தோரையும் அம்மயமாக்கும் தகையினராய் விளங்குவார் எனத் தெரிவித்துள்ளார்கள். 
-இராமலிங்க சுவாமிகள் திவ்விய சரித்திரம் 

12.தெய்வப்பணி: 

1867 பிரபவ ஆண்டு வைகாசி 11ல் தொடங்கப்பெற்றது சத்திய தருமச்சாலை. அப்போது அது கூரை வேய்ந்த கட்டடமாகவே இருந்தது. தொடக்க நாளன்று செங்கல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மட்டும் நடந்தேறியது. ஆனால் 
1. வள்ளல்பெருமான் 4 ஆண்டுகள் தங்கியருளிய காலத்தும் 
2. கல்பட்டு ஐயா 25 ஆண்டுகள் தொண்டு செய்த காலத்தும் 
3.சுப்புராயர் 30 ஆண்டுகள் பணிவிடை செய்தகாலத்தும் ஏழையர் பசிபோக்கும் தருமம், 
விழல் வேய்த கூரைக் கட்டடத் திலேயே நடந்து கொண்டிருந்தது. 

அதனை மாற்றிச் செங்கல் கட்டடமாக்கும் எண்ணகொண்டார் நாராயணர். அவ்வெண்ணத்திற்கு ஆசி வழங்கினார் சுப்புராயர். ஒத்துழைப்பு நல்கினார்கள் நாகப்பட்டினத்து அன்பர்கள். அத்தகைய தெய்வ வலிவோடு வேண்டிய பொருள்களைச் சேகரம் செய்தார் நாராயணர். 

பெருமானின் திருவுள்ளப்பாங்கின்படி 60 ஆண்டுகள் நிறைத்த அடுத்த பிரபவ வருடத்தில் 1927ல் வைகாசி 11ல் செங்கல் கட்டடப் பணி முடித்து அங்கே சத்திய தருமத்தை ஓங்கிய வளரும்படிச் செய்திட்டார் உத்தமர் நாராயணர் அங்ஙனம் செய்து அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிபெருங் கருணைக்குப் பாத்திரரானார். 

13.தொடர்பணி: 

தருமச்சாலை பிரவேசத்திற்குப் பேருதவி செய்தவர்களில் முன்னணி பெற்றவர் நாராயணர். அம்மட்டோ! சுப்புராய சுவாமிகள் போல நாராயணரும் ஊர் ஊராகச் செல்வார். தானியங்களைச் சேகரிப்பார். காய்கறிகளைச் சேகரிப்பார். சாலைப் பண்டங்களைச் சேகரிப்பார். எரிபொருள்களைச் சேகரிப்பார்; அத்துணையும் வடலூர் சாலைக்கு கொண்டு வந்து சேர்ப்பார்; பாதுகாப்பார்; இடைவிடாமல் அன்னப் படையல் செய்வார்; அகம் பூரிப்பார்; அவ்வாறு செய்த அகத்தொண்டால் திருவருட்பிரகாச வள்ளலின் திருவடிக்கு அணிகலன் ஆனார். 

14.நிறைபணி: 

நம்பெருமானின் நலமிகு தொண்டினால் அகம்பூரித்து அனுபவம் பல பெற்றார். ஞான நூல்களுக்கு நல்விளக்கங்கள் தந்திட்டார். உண்மைத் தொண்டுக்குப் பின்னும் பலரை ஆளாக்கினார். ஆந்திர நாட்டு நெல்லூரிலிருந்து வந்திட்ட மறையவர் குலத்துச்சாது ஒருவரை மீளா அடிமையாக்கினார். 90 ஆண்டுகட்டுப் பக்கமாகத் தெய்வத் தொண்டாற்றினார். 

நம் பெருமான் திருக்காப்பிட்டு அருளிய தெய்வத்திருநாளாம் தைப் புனர்பூசத்தன்று 1945ல் உயிர் அடக்கம் கொண்டிட்டார். அவரது நல்லுடல் கட்டமுத்துப்பாளையத்தில் சமாதி செய்யப்பெற்றது. அவரது நல்லுணர்வு நமக்கெல்லாம் ஒளிவழங்கி உயர்த்துவதாகட்டும்! 

1988-அடுத்த பிரபவ ஆண்டு தொடங்கி சத்திய தருமச் சாலையின் கான்கிரீட் திருப்பணி அற்புதமாக நடந்து 24-5-93-ல் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment