திருச்சிற்றம்பலம்
வள்ளற் பெருமானாரின் வழி வழித் தொண்டர்கள்
சுப்புராய பரதேசி அருள் வரலாறு
நமது அருள் தந்தையாம் வள்ளலின் பெரும் புகழ் எங்கும் பரவிக் கொண்டிருந்தது. வேதாந்தக் காற்று ஒருபுறம் வீசிக் கொண்டிருந்தது; சித்தாந்தத் தென்றல் ஒருபுறம் தவழ்ந்து கொண்டிருந்தது; ஆரிய சமாஜம் தளர் நடை இட்டது; பிரம்ம சமாஜம் பீடுநடை போட்டது; கிறித்துவ சமயம் வேரூன்றிக் கொண்டிருந்தது; மகமதிய சமயம் கப்பும் கவடும் விட்டது; உலகாயதம் உணர்வு பெறப் பாடுபாட்டுக் கொண்டிருந்தது; சைவ சமயம் எல்லையை அளந்து கொண்டிருந்தது; வைணவ சமயம் வாதமிடத் தொடங்கியது. இத்தனைக்கும் பொது நெறியும், புது நெறியும், மெய்நெறியும், ஒளிர்நெறியுமாகிய பெருமானின் சன்மார்க்கம் பற்றித் தமிழகத்தவரும், மற்ற மாநிலத்தவரும் அறிந்திடலாயினர். அதுமட்டுமன்று; வெள்ளையர்களும் கூட விளக்கம் பெற்றிட நம் பெருமானை அடுத்தனர்; திருவாசகத்தை மொழி பெயர்த்த போப்பையரும், சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் பாடிய வேதநாயகரும், நம் பெருமானை அணுகி உயர்விளக்கங்கள் பெற்றனர். அக்காலத்துச் சங்கராச்சாரியார் கூட வேதத்தில் தோன்றிய ஐயாவிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர், வட்ட ஆட்சித்தலைவர், பிற அரசு அலுவலர்கள், வழக்குரைஞர்கள் கூட பெருமானை அண்டித் தங்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துப் ஐய்யப்பாட்டினை போக்கிக் கொண்டனர்.
அவ்வாறே அண்டை மாநிலத்தவர்களும் பெருமானின் திருவருளுக்குப் பாத்திரமாயினர். அவர்களுள் ஒருவர்தான் தெலுங்கு தேசத்து சந்நியாசி. அவர் பெயரோ சுப்புராயப் பரதேசி.
வள்ளல்பெருமான் கண்டெடுத்த வளர்மணிதான் கல்பட்டு ஐயா,
கல்பட்டு ஐயா கண்டெடுத்த கண்மணிதான் சுப்புராயர்,
வள்ளலின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உணர்வு சுப்புராயர் போன்றவர்களைக் கவர்ந்தது. தலயாத்திரை மேற்கொண்ட போது வடலூர் வந்து சென்றார் சுப்புராயர். அப்போது கல்பட்டு ஐயா, தொழுவூர்ப் பெருந்தகை, காரணப்பட்டார் ஆகியோர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சற்குருநாதரைத் தேடிக்கொண்டிருந்த கல்பட்டு ஐயாவுக்கு வள்ளல் கிடைத்தது போல உண்மை அறச்செயலைத் தேடிக் கொண்டிருந்த சுப்புராயர்க்குக் கல்பட்டு ஐயா தொடர்பு கிடைத்தது.
வள்ளல் பெருமானின் சித்திப் பேற்றிற்கு முன்பே கல்பட்டு ஐயா வடலூரில் வசித்தார். வள்ளலின் பேறடைவுக்குப் பின் சுப்புராயர் கல்பட்டு ஐயாவை அடைந்தார். தவயோக நெறியிலும், உயிர்நேயத் தொண்டிலும் உடல், பொருள், உயிரினை ஒப்புக் கொடுத்த கல்பட்டாரின் நடைமுறைகள், சுப்புராயர்க்கும் பெரும் பயனை உண்டாக்கித் தந்தன. அதன் காரணமாக அடுத்து அடுத்து வடலூர் வரவும் பின்பு வடலூரிலேயே நிலை பெறவும் சுப்புராயர் முடிவு செய்தார்.
சுப்புராயரின் இளமைப்பருவம் பற்றித் தெளிவாகத் தெரிந்தது கொள்ளும் செய்திகள் கிடைக்கவில்லை; என்றாலும் வடலூர்ப் பணிகளை தன் உயிர்ப் பணிகளாகச் சுப்புராயர் தேர்ந்து கொண்டார். அப்போது அவரது சரித்திரம் அதிசயிக்கத்தக்க சரித்திரம் என்பதில் ஐயமில்லை.
வள்ளல்பெருமான் பெருநிறைவு பெறுகின்ற தருணம் வந்து கொண்டிருந்தது.
முதலில் உண்டாக்கிய சன்மார்க்க சங்கத்துப் பணிகளைத் தொழுவூரார் போன்றவரிடம் ஒப்படைத்தார்கள். இரண்டாவதாக உண்டாக்கிய சத்திய தருமச் சாலைப் பணிகளைக் கல்பட்டு ஐயாவிடம் ஒப்படைத்தார்கள். மூன்றாவதாக உண்டாக்கிய சத்திய ஞான சபைப் பொறுப்பினைச் சபாபதி சிவச்சாரியார் போன்றாரிடம் ஒப்படைத்தார்கள்.
நான்காவதாகத் திகழ வைத்திட்ட சித்திவளாகப் பராமரிப்பினைச் சேலம் ஹவுஸ் ஞானாம்பாள், மேட்டுக்குப்பம் வாழ் பெருங்குடும்பத்தவரிடம் ஒப்படைத்தார்கள்.
ஆதலில் பெருமானின் அருட்சித்திக்குப் பின்னர் கல்பட்டு ஐயா, சுப்புராயர், தெலுங்கு தேசத்துப் பிராமண சந்நியாசி, கட்டமுத்துப் பாளையம் நாராயணர் ஆகியவர்கள் பராமரிப்பில்தான் சத்திய தருமச் சாலையின் ஜீவகாருண்யப் பணிகள் சீருடனும் சிறப்புடனும் தொடந்தது.
அத்தகைய தருணங்களில் வந்து வந்து ஊக்கமும் உணர்ச்சியும், உண்மை அறச்செயலையும் மேற்கொண்டவரே ஈப்புராயர். திருமுருகனின் திருப்பெயரே சுப்பையன் என்பது. ஆன்ம அறிவின் விளக்கமாகத் திகழ்ந்திடும் தெய்வமே முருகன் அவனது அருட்பெயரையே தாங்கினார் சுப்புராயர்.
இராயர் - என்னும் சொல் அரசர் என்னும் பொருளைத் தரும். ஆன்ம அறிவுக்கு இயல்பு ஜீவகாருண்யம்; அந்த ஜீவகாருண்ய செந்நெறிக்கு அரசராகக் கிடைத்தவரே சுப்புராயர்.
பரதேசி; மேலான நாட்டில் வசிப்பவர் என்பது பொருள் நாம் எல்லாம் உணவுக்கும் அதனைச் சார்ந்த உணர்வுக்கும் ஆட்பட்டுக் கீழான நாட்டில் உழன்று உழன்று உருக்குலைகின்றோம். இளமை
முதலாகச் சீரிய துறவறச் செம்மலாகத் திகழ்ந்து ஒளிர்ந்தவர்தான் சுப்புராயர். இவ்வாறே சுப்புராயப் பரதேசி காலத்தில் அமாவாசைப் பரதேசி என்பார் சத்திய ஞானசபைத் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கல்பட்டு ஐயாவினால் உருவாக்கப்பெற்ற சுப்புராயர் சாலைப் பணிகளை 6-2-1902 தன் பொறுப்பில் மேற்கொண்டார். இதுபற்றிச் சத்திய தருமச் சாலைப் பதிவுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது முதற்கொண்டு சாலை மேலும் மேம்பட்டு விளங்க மனம், வாக்கு, காயங்களால் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்.
அவ்வப்போது சாலையின் தெய்வப்பணி சிறப்புடன் நடக்க அண்டை அயல் ஊர்களுக்கு எல்லாம் கால்நடையாகவே சென்றார். அன்னதானத்திற்கு வேண்டிய பொருள்களைச் சேமித்து வந்திட்டார். அத்துடன் பெருமானால் சுட்டிக் காட்டப்பெற்ற கூழ் வார்க்கும் பணியினையும் ஆதரவற்றார் பசிதீர்க்கும் அறத்தினையும் இடைவிடாமல் மேற்கொண்டு வந்தார். அதன்வழி ஆன்ம லாபத்தினை ஈட்டிடவும் முயன்றார்.
அவர் உணவுப் பொருள் திரட்டப் பகற்பொழுதினைப் பயன்படுத்தாமல் இரவுப் பொழுதில் வெளியூர்களுக்குப் புறப்படுவார். பகலில் சத்திய தருமச்சாலைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி இன்புறுவார். அவ்வாறு இரவில் செல்லும்போது இருட்டில் சுப்புராயரின் முன் இரண்டு லாந்தர்களோ அல்லது இரண்டு தீவர்த்திகளோ ஒளி உமிழந்து செல்வது வழக்கம். அதனை உற்று நோக்கில் ஒன்றும் புரிவதில்லை. ஆதலில் அருட்பிராகாசரின் அருட்பெயரும், தன்னை ஆட்படுத்திய தவச்சீலர் பெயரும் ஒன்றேயாகித் திகழ்ந்ததனை உணர்ந்து அவர், இரவில்-இருட்டில் "இராமலிங்கம்” என்னும் திருநாமத்தையே இடையறாது ஓதி இருட்கடலையும், மருட்கடலையும் கடந்திட்டார்.
அதுபற்றிக் காரணப்பட்டு சமரசபஜனை கந்தசாமி ஐயா இவ்வாறு இசைப்பாட்டாக்கிப் பாடியுள்ளார்கள்.
சற்பத்தியுற்ற சுப்புராயப்பரதேசி
சத்திய தருமச் சாலைத்
தனிலிருந்து குளிஞ்சிக் குப்பத்துக்குத்
தனியே சென்றிடும் காலை
சாலையில் இரவில் ராந்தல் மாத்திரம்
தனக்குமுன் செல்வதறிந்து தோத்திரம்
தன்னுள்ளே சொல்லிக் கொண்டே ஏசுவும் மறைந்த
தரம் அறிந்தோம் வினை போகவும் நிறைந்த
கதிபெற்று உய்யக்கடைக்கண் பார் ஐயா
-ஸ்ரீராமலிங்கையா
கருணை செய்ய எமக்கு இங்கு யாரைய்யா
(பிள்ளைப் பெருமான் திருவிளையாடல்-9)
சேக்கிழாரின் பெரிய புராணம் நடை நலம் உள்ளதாக இராமலிங்கசுவாமி சரித்திரம்" என்னும் நூலினைப் பாடி பரவினார் பண்டிதை அசலாம்பிகை என்னும் அம்மையார்.
அவர்களோ
"சாலையில் அன்னதானப் பணியினை ஆற்றுச் சார்ந்து
மேலிவண் உறைந்த சுப்புராயப் பேர் விரவும் அன்பர்
கோலிய பொருளை நாடி இருளினில் குறுகும் காலை
வாலிய வெளிச்சம் முன்னே வயங்கும்" என்று
உணர்த்திட்டாரால்
-சித்திவளாகத் திருமாளிகைச் செறிவு : 2 : 12
மற்றும் "திருவருட்பிராகாச வள்ளலார் திவ்விய சரித்திரம்” வரைந்த பிறையாறு சிதம்பர சுவாமிகளும் பின் வருமாறு தெரிவித்துள்ளனர்.
"சாலையில் தொண்டு செய்து வந்து சுப்பராய பரதேசி என்பவர் சாலை அன்னதான வசூலுக்கு குளிஞ்சிக்குப்பம் முதலிய கிராமங்களுக்குச் செல்வது வழக்கம். மிகவும் பயங்கர வழியில் செல்லுங்கால் இரண்டு லாந்தர்கள் ஆள் தெரியாமல் முன்னே செல்லும். பரதேசி பயமற்று வழி கடப்பர்".
பகல் எல்லாம் சத்திய தருமந் சாலைப் பணிகள்; இரவெல்லாம் சாலை சரிவர நடத்தி வைக்க வேண்டிய புறத்தின் இயங்கும் பணிகள். இப்படி அல்லவா வள்ளலின் தருமத்தை இனிதே நடத்தி வைக்க வந்திட்டார் தெலுங்கு நாட்டிலிருந்த சுப்புராயர்.
அப்போது சுப்புராயருக்குப் பழக்கமானவரே கட்டமுத்துப் பாளையம் நாராயணரெட்டியார். அத்துடன் சுப்புராயரின் அறிவுரையால் 60 ஆண்டுகட்குப்பின் சத்திய தருமச் சாலையைக் கல் கட்டடமாக ஆக்கித் தந்தவரும் அவரே. அவ்வாறு நாராயணர், நாகப்பட்டினத்துச் சன்மார்க்க அன்பர்கள் ஆகிய உண்மைத் தொண்டர்களை உருவாக்கும் பெருமுயற்சியிலும் ஈடுபட்டார் சுப்புராயர்.
சுப்புராயர் காலத்தில்தான் நம் பெருமானின் திருவுருவத் திருமேனி சாலையில் அமைக்கப்பட்டதாகக் கேள்வி.
காரணம் தொடக்க நிலையில் உருவ வழிபாட்டிற்குஎன பெருமானின் திருவுருவமும்,
வளர்நிலையில் சத்திய ஞான தீபமும்,
நிறைநிலையில் ஞானசிங்காதனப் பீடத்தில் ஞான சொரூபத்துடன் இறைவன் விளங்குவதாகவும் கருதி வழிபட அமைக்கப்பட்டதே அம்மூன்று நிலைகள்.
அப்படி இறைவர் வேறு, இராமலிங்கப் பெருமான் வேறு என்றில்லாமல் இருவரும் ஒருவரே என உணரவே அவ்வாறு அமைக்கப்பட்டது. இறைவரோ, உருவ நிலையில் இராமலிங்கம் உருஅருவ நிலையில் சத்தியஞானதீபம், அருவநிலையில் ஞான சிங்காதனத்தில் விளங்கும் ஞானசொரூபம் எனத் தரத்திற்கு ஒத்த வழிபாட்டு முறையைச் சேர்ந்துத் தந்த இனிய தொண்டரே சுப்புராயர்.
அவர் 30 ஆண்டுகள் இடையறாமல் தவலிமையும் அறவலிமையும் மிளிரத் தொண்டாற்றினார். அதனால் வள்ளல் பெருமானின் பெருங்கருணைக்கு அங்கமானார். பின்பு 1931-அ ஆண்டு வைகாசி 10ஆம் நாள் பூச நன்னாளன்று உயிரடக்கம் பெற்றார். அவரது தவமேனி கல்பட்டு ஐயாவின் சமாதிக்கு எதிரில் கீழ்ப்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய சுப்புராயரின் தொண்டினைத் தேவர்களும் மூவர்களுமே போற்றிப் புகழ்வார்கள். அப்படியிருக்க நாமும் போற்றிப் புத்துணர்வு பெறுவோம்! புண்ணிய பணியில் ஈடுபடுத்திக் கொள்வோம்!
No comments:
Post a Comment