தொழுவூர் வேலாயுதனார் திருவருட்பெருமை
பொறிவே றின்றிநினை-நிதம்-போற்றும் புனிதருளே
குருவே றின்றி நின்ற-பெருந்-சோதி கொழுஞ்சுடரே
செறிவே தங்களெ லாம்-உரை-செய்ய நிறைந்திடும் பேர்
செறிவே தங்களெலாம்-உரை-செய்ய நிறைந்திடும் பேர்
அறிவே தந்தனையே-அரு-ளாரமு தந்தனையே!
-அருள் ஆமுதப்பேறுத்; திருவருட்பா-6
தெரிந்து வணங்குவோம்
அருந்தமிழ் வள்ளல் அருளிய அருட்பா
பொருள் தெரிந்துவக்கும் பொருந்திடும் விதத்தில்
அருந்தமு தாக்கி அளித்ததொழுவூரார்
சிறந்தநல் லுள்ளம் தெரிந்து வணங்குநீவாம்.
-வான்ஒளி அமுதக் காவியம்
1.நம்பிள்ளை நமக்குக் கிடைத்தாய்:
1849 ஆம் ஆண்டில் ஒரு நாள் ஓர் இளைஞர் வள்ளற்பெருமானை வணங்கி வாழ்த்துப் பெற சென்றிட்டார். சென்னையில் ஏழு கிணற்றுக்கும் அடுத்த வீராசாமி பிள்ளைத் தெரு வீட்டு மாடிக்கு நுழைந்திட்டார். இளங்காலை எழுந்தேறு இளஞ்சூரியன் ஆங்கிருக்கக் கண்டிட்டார். அவர் முன் விழுந்து வணங்கி, எழுந்து ஓலைச்சுவடி ஒன்றினை அவர்தம் அருள் திருக்கைகளில் தந்திட்டார்.
"அண்ணலே! பழஞ்சுவடியில் இருந்து எடுத்து எழுதிய சங்க பாடல்கள் இவை. கண்டருளல் வேண்டும்" என்று கனிமொழி உதிர்த்திட்டார். "ஆகட்டும் பார்க்கலாம்" என்று மொழிந்தருளினார். புன்முறுவலோடு அவ்வேடுகளை ஒவ்வொன்றாய்ப் புரட்டி உணர்ந்திட்டார் வள்ளலும் 1 படித்து மெல்ல முடித்து அவ்விளைஞர் முகத்தினைப் பார்த்திட்டார். "இது சங்கத்துப் பாடல்கள் அல்ல இருப்பின் பிழைகள் இரா. யாரோ பொருள் இலக்கணம் தேர கற்றுக்குட்டிப் பாடல்கள் இவை" என்று மதிப்புரை வழங்கிட்டார். அது கேட்டதும் அடியற்ற மரம்போல் வள்ளல் திருவடிகளில் விழுந்தார் அவ்விளைஞர்.
"மன்னிக்கவேண்டும், அடியேன் எழுதியவை இவை சங்கப்பாட்டென்றதைப் பொருத்தருளல் வேண்டும்" என்று கண்ணி விட்டு கனிந்து அழுது நின்றிட்டார்.
"சிலபிழைகள் இருப்பினும் அருமையான பாடல்கள் தாட தாழ்வன்று, நம்பிள்ளை நமக்கு கிடைத்தாய். புதியன் அல்லன் பழையனே "என்று புன்முறுவல் பூத்த முகத்தினராய் தொட்டு
அவ்விளைஞரைத் தூக்கி நிறுத்தி வாழ்திட்டார் நம்பெருமான்!
2.தொழுவூர் வேலாயுதனார்:
அவ்விளைஞர்தான் தொழுவூர் வேலாயுதனார். 19-8-1832 இல் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் உள்ள தொழுவூரைப் பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த, செங்கல்வராயர்- ஏலவார்குழலி பெற்றோருக்கு பிறந்தவர். உரிய பருவத்தில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். தக்காரிடம் படிக்க வைக்கப் பெற்றார். தமிழ், வடமொழி, தெலுங்கு, ஆங்கிலம் முதலிய மொழிகளை முறையாகக் கற்றார். தந்தையார் வணிகம் செய்து கொண்டிருந்தபோது ஆந்திர நாட்டில் பூடி என்னும் ஊரில் இராசபிளவை நோயால் காலமானார். அதனால் குடும்பப் பொறுப்பைப் பார்க்கும் நிலைக்கு ஆளானார். அதனால் கல்வி தடைப்பட்டது ஆயினும் படிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள விருப்பம் குறைவுபடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். அந்த இளம் பருவத்தில்தான் வள்ளல் பால் வந்து சேர்ந்திட்டார் தொழுவூரார். அவரைத் தன் தலைமை மாணாக்கராக்கி மகிழ்ந்திட்டார் நம்பெருமான்.
3.தந்தையறிவு மகனறிவு:
ஆர்வம் பொங்கி வழியும் நன்மாணவராக அவரும் விளங்கிட்டார். தமிழ் வடமொழிகளில் இருக்கும் கலை இலக்கிய இலக்கணங்களை எல்லாம் அவர் கற்க முறையாகச் செய்திட்டார். ஆய கலைகள் அனைத்திலும் சிறந்து விளங்கும்படி கற்பித்தருளினார். ஒரு கருத்தை ஒட்டிப் பேசுதல், வெட்டிப் பேசுதல் முதலிய பேச்சுக் கலையிலும் சிறந்து விளங்கச் செய்திட்டார்.
தந்தை அறிவு மகனறிவு என்று அவரே பாராட்டும் படியாகப் வள்ளலிடம் இருந்து கற்றுக் கொண்டார் வேலாயுதரும். அப்பொழுது திருஒற்றியம்பதியில் அளவற்ற ஈடுபாடு கொண்டு வள்ளல் பாடியும் பணிந்தும் இருந்தது கண்டு தொழுவூராரும் சென்று வணங்கி மகிழ்ந்திருந்தார். சென்னை லிங்கிச் செட்டி தெரு சோமு செட்டியார் வீட்டுச் சொற் பொழுவிலும் தொடர்ந்து வள்ளல் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார்.
4.சங்கரர் ஐயம் தீர்த்தல்:
அக்காலத்தில் இருந்த காஞ்சிக் காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியர் சென்னை வந்திருந்தார். "நெடுநாளாக வடமொழி நூல் ஒன்றில் உள்ள ஐயத்தை அகற்ற வல்லவர் நமக்கு இச்சென்னை மாநகரில் எவரேனும் உளரோ?" என்று வினவினார். அன்பர்கள் அவரிடம் வள்ளற்பெருமான் உள்ளார் என்றனர்.
அஃதறிந்து பெருமான் தம் மாணவரோடு சங்கரர் இருந்து இடத்திற்குச் சென்றனர். வரவேற்று முகமன் கூறி அமர்ந்தனர். புன்முறுவலோடு சங்கரரும் தமக்கு ஐயமுள்ள வடமொழி நூற்பகுதியைச் சுட்டிக்காட்டி வள்ளலிடம் கொடுத்திட்டார். அவரும் வாங்கிப் படித்து உணர்ந்து கொண்டு தன் அருகில் இருந்து மாணவர் தொழுவூரார் கையளித்து விளக்கம் கூறும்படிப் பணித்தார். அவரும் மிகத்தெளிவாக அப்பகுதியின் பொருளை எடுத்துரைத்தார். அது கேட்டு ஐயம் நீங்கி அகம் மகிழ்ந்தார் சங்கரர் வடமொழி ஐயத்தை நீக்கும் அளவுக்கு அறிவுடையவராக விளங்கினார் வேலாயுதனாரும்.
5.தொடர்பும் பயணமும்:
இடைவிடாமல் வள்ளலோடு அந்தக் காலத்தில் தொழுவூரார் இருந்தார். மனுமுறை கண்ட வாசகத்தை உரைநடையில் 1854ல் எழுதியருளினார் நம்பெருமான். ஒழிவிலொடுக்கம், சின்மயதீபிகை தொண்டமண்டல சதகம் ஆகிய மூன்று நூல்களைப் பதிப்பித்தார். அப்பொழுதெல்லாம் பெருமான் பணிகண்டு மகிழ்ந்தார். பல மாணவர்கள் அடுத்து வந்து பெருமானிடம் பாடம் கேட்டனர். அவர்களோடும் நெருங்கி இருந்தார். 1858 ஆம் ஆண்டு சென்னையை விட்டு தென்திசைப் பயணம் செய்தார் நம்பெருமான் அப்பொழுதும் அன்பர்களோடு தொழுவூராரும் உடன் சென்றார். சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், நாகை, திருவாரூர் திருக்கண்ணமங்கை முதலிய ஊர்களில் உள்ளத் திருக்கோயில்களில் வழிபாடு செய்து பாடி சிதம்பரம் மீண்டனர். கருங்குழி மணியக்கார வீட்டில் தங்கவேண்டி நின்றதால் பெருமானை விட்டு அன்பர்கள் சென்னைக்கு திரும்பினர்.
6.மணவாழ்க்கை:
பெங்களூரில் வாழ்திருந்த கிருட்டிணசாமி என்பவர் தக்கார் வழி அறிந்து கொண்டு வேலாயுதனாரைத் தன் ஒரே மகள் சீரங்கம்மாளைக் கொடுத்து மருமகன் ஆக்கிக்கொண்டார். மகளைப் பிரிய இயலாமல் பெங்களூரிலேயே தங்கவைத்துக் கொண்டார். நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் வேலையும் வாங்கித் தந்தார். எனவே பெங்களூரில் வேலாயுதனார் தங்கி இருந்து வாழ வேண்டியிருந்தது.
7.வள்ளலுடன் இருந்தார்:
இருப்பினும் பெருமான் தொடர்பில் இருந்து கொண்டிருந்தார். அடிக்கடி சென்று பார்த்து வந்தார். திருமுதுகுன்றம், திருக்கோயிலூர் வேட்டவலம், திருவண்ணாமலை, திருவதிகை ஆகிய தலங்களுக்கு சுற்று பயணம் செய்யுங் காலங்களில் பெருமானுடன் சென்றார்.
சென்னையில் இருக்கும் அன்பர்களோடும் தொடர்பு வைத்திருந்தார். பெருமான் அவ்வப்போது அருளும் பாடல்களைத் தொகுத்து வைத்துக் கொண்டு வழிபாடும் செய்து வந்தார்.
1865ல் வள்ளல் பெருமான் நிறுவிய சன்மார்க்க சங்கத்திலும் பங்குகொண்டார். அதனை, கட்டிக் அமைப்பதிலும் முன்நின்றார். கொள்கைகளைப் பரப்புவதிலும், சங்கங்களை பல இடங்களில் நிறுவுவதிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
8.சென்னை வாழ்க்கை;
எனவே பெங்களூர் வாழ்க்கையைத் தொடர விரும்பாமல் சென்னைக்கு குடும்பத்தினை கொண்டு வந்தார். பெருமானைத் தொடர்பு கொள்ளவும் அன்பர்களோடு கலந்திருக்கவும் தடைப்படாமல் இருக்கவே அவ்வாறு செய்தார். அவரும் குடும்பத்துக்காக உழைக்க வண்டி இருந்தது. தையற்கடை ஒன்றில் வேலை செய்தார். ஆறு ரூபாய் சம்பளம் கிடைத்தது. அது கொண்டு குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார். சன்மார்க்கப் பணிகளிலும் ஈடுபட்டார்.
9.திருஅருட்பா வெளியீடு
1866-ல் அன்பர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு வள்ளல் பாடியருளிய பாடல்களை அச்சிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை வள்ளல் தொழுவூராரிடம் ஒப்படைத்தார். அவர் விருப்பம் போல் வெளியிடலாம் என்றும் உத்தரவிட்டார்.
அதுகாறும் பாடியருளிய அனைத்துப் பாடல்களும் வேலாயுதனாரிடம், வந்து சேர்ந்தது. அவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் கவனமாக படித்தார். சிலவற்றிற்க்கு வள்ளல் தலைப்பிட்டியிருந்தார். சிலவற்றிக்கு இடவில்லை. சில பாடல்களில் வகை குறித்திருந்தார், சிலவற்றிக்கு இடவில்லை. பலவற்றில் இல்லை அவற்றை எல்லாம் நுணுகி ஆராய்ந்து தலைப்பிட்டார். பாடல் வகை குறித்தார்.
பெருமான் பாடி அருளிய அனைத்துப்பாடல்களையும், ஆறு பிரிவுகளில் தொகுக்க விரும்பினார்.
அதன்படி திருவடிபுகழ்ச்சி, விண்ணப்பக் கலிவெண்பா, நெஞ்சறிவுறுத்தல், சிவநேசவெண்பா, மகாதேவமாலை, திருவருள்முறையீடு, வடிவுடை மாணிக்கமாலை, இங்கிதமாலை ஆகிய எட்டு நூல்களையும் முதல் பிரிவில் வைத்தார்.
திருஒற்றியூர் பாடல்களை எல்லாம் இரண்டாம் பிரிவில் அடக்கினார்.
ஒற்றியம்பதிப்பில் பாடிய அகத்துறையைச் சார்ந்த பதிகங்களை எல்லாம் மூன்றாவது பிரிவில் வைத்தார். அப்பொழுது பாடியிருந்த சிதம்பரப் பாடல்களையும் நால்வர் பாடல்களையும் நான்காவதில் சேர்த்தார். கணேசர் பதிகங்கள், முருகர் பதிகங்கள், திருத்தணிகை பாடல்கள் அனைத்தும் ஐந்தாவது பிரிவுக்குள் சென்றன.
பாடிக்கொண்டிருப்பதும், பாடப்போவதும் ஆறாம் பிரிவில் சேரும்.
அடங்கல் ஒன்றினை அமைத்தார். பிரிவுகள் திருமுறை ஆனது. தொகுப்புப் பெயர் திருஅருட்பா ஆனது. இவ்வேற்பாட்டை எல்லாம் வள்ளலிடம் விளக்கிச் சொல்லி இசைவு பெற விரும்பினார். கருங்குழிக்கு வந்தார். பெருமான் பார்வைக்கு வைத்தார். வள்ளலுக்கு பொருத்தமாவே இருந்தது. எனவே ஒப்புக்கொண்டார்.
"முதல் நான்கு திருமுறைகளை மட்டும் அச்சிடுங்கள். ஐந்தாவது திருமுறையை பிறகு அச்சிடலாம். ஆறாவது திருமுறை அனுபவமாதலான் சன்மார்க்கம் விளங்கும். காலந்தான் வெளியிடவேண்டும். அதனை உத்தரவு தரும் வரையில் வெளியிடக்கூடாது. சென்று வேலையை துவக்குங்கள். வாழ்த்துகள்! "
என்று வள்ளல் திருவாய் மலர்ந்தருளினார்.
உள்ளத்தில் தன்னை நீக்கி நம்பெருமானை இருத்தி வைத்துக்கொண்டு அச்சீட்டுப் பணிகளைத் தொடக்கம் செய்தார். தேவையான அனைத்து உதவிகளையும் புதுவை வேலு, இறுக்கம் இரத்தினம் முதலிய அன்பர்கள் பார்த்துக்கொண்டனர்.
பாடல்கள் விளங்கும் வகையில் படித்து எழுதி அச்சுக்கு தரப்பட்டது. எனவே எழுதா எழுத்தில் பாடல்கள் பதிந்தன. அச்சீட்டு படிவங்கள் வரவரத் திருத்தங்கள் செய்து தரப்பட்டன. உடனுக்குடன் செய்ததால் அச்சுப்பணி நிறைவுப்பெற்றது.
"ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயிரம் பாயிரம் அல்லது பனுவலும் அன்றே" என்பது இலக்கணம். அருட்பாவுக்கு ஒரு முன் வைக்கும் விளக்கம் தேவை என்று அன்பர்கள் கருதினர். விருப்பப்டி ஒன்றை எழுத வேண்டினர். திருவருட்பா வரலாறு என்று ஒன்றினை செய்தார். அன்பர்களிடம் காட்டினார். பெருமான் இசைவுபெ வேண்டும் என்று கருதி தொழுவூரார் உடனடியாக கருங்குழிக்கு வந்தார். வள்ளல் திருமுன் வைத்து வணங்கினார். 63 பாடல்கள் பார்வையிட்டார். திருவருட்பிரகாச வள்ளலார் என்று குறித்திருக்கு. முகப்பேட்டைப் பார்த்தார்.
"திருவருட்பிரகாச வள்ளலார் என்று யாருங்காணும் போடச்சொன்னது?" என்று கடுகடுத்தார். சில நொடிகள் மாறாத பார்வையைத் தொழுவூரார் மேல் வைத்தார். அவர் கைகட்ட வாய்ப்பொத்தி உடல் நடுங்க நின்னு கொண்டிருந்தார். உடனே "திருவருட்பிரகாச வள்ளலார் யார்? என்று தேடிக்கொண்டிருக்கும்
சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை" என்று கொள்ளாம். தானே! கொள்ளட்டுங்காணும் "என்று புன்முறுவல் பூத்தார். அது கண்டு துயரம் நீங்கினார் தொழுவூரார்.
முற்றும் பார்வையிட்டும் படித்தும் பார்த்தும் உணர்ந்தும் கொண்டவராய் தொழுவூராரை நோக்கினார் வள்ளல்! "ஒவ்வொரு பாடலும் 63 பாடலுக்குச் சமங்காணும்” என்று உரைத்தருளி உவகைக்கொண்டாடினார். அதனை அருட்பாவின் இறுதியில் சேர்த்து அச்சிட்டுக்கொள்ள இசைவும் வழங்கினார் பெருமான். அதன் அருமை பெருமைகள் உலகு உள்ள அளவும் நின்று நிலவும் என்பதை அன்பர்கள் உணர்வார்களாக 1867 பிப்ரவரி திங்களில் திருஅருட்பாவை வள்ளற்பெருமான் வெளியிட்டு அன்பர்களுக்கு வழங்கி வாழ்த்துரைத்தார். திருவருட்பாவின் அனைத்து பதிப்புச் சிறப்பும் தொழுவூரார்க்கே உரியது என்பதை நாம் மறந்துவிடலாகாது. ஊரன் அடிகள் வெகுவாக பாராட்டுவதை அவர் எழுதிய நம்பெருமான் வரலாற்றில் அன்பர்கள் கண்டுகொள்ளலாம்.
10.திருக்குறள் பாடம் நடத்துதல்:
சாலையை நம்பெருமான் தொடங்கினார். பலரும் பசியாறி மகிழ்ந்தனர். அவர்களுக்கு செவியாற நற்செய்தியையும் வழங்கியருள வள்ளல் விரும்பினார். திருக்குறளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி பாடம் நடத்தத் தன் முதன் மாணாக்கர்க்கு கட்டளையிட்டார். உலகிலேயே முதல் முதலில் திருக்குறளைப் பாடமாக நடத்தி மக்களுக்கு உணர்த்தியவர் தொழுவூரார்தான்.
11.வடலூர் வாழ்க்கை:
சாலைப் பணியிலும் ஈடுபட்டார். சங்கப் பணி முழுவதையும் அவரே கவனித்தார். இப்பொழுது குடும்பத்தை வடலூருக்கே கொண்டு வந்தார். குடிலமைத்துக்கொண்டு தங்கினார். தன் வழிபாட்டிலும் பெருமான் திருவருள் பாலிப்பால் சிறந்து விளங்கினார்.
12.கடிதம் எழுதியவர்:
ஒரு கால் மதுரையிலிருந்து ஒரு கடிதம் பெருமானுக்கு வந்துற்றது. அதில் இலக்கண தேர்ச்சியில்லாதவர் என்று குறிக்கப்பெற்றிருக்கக் கண்டு அன்பர்கள் கொதித்தனர். இலக்கணக் கடிதம் எழுத வேண்டினர். வேண்டா வெறுப்பாக தொடக்கம் செய்து கொடுத்து, தொழுவூராரை எழுதி விடுக்கும்படி பணித்தார். அது கண்டு பொருள் விளங்காமல் கடிதம் எழுதியவர் வள்ளல் திருவடியில் வந்து விழுந்து மன்னிக்க வேண்டினார். அத்தகு அரிய கடிதத்தை எழுதியவர் தொழுவூரார்தான்!
13.களவுபோன நகை:
வடலூரில் தொழுவூரார் மனைவி சீரங்கம்மாள் நகை இல்லையே என்று வருந்தியது உணர்ந்து நம்பெருமான் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார். சில நாளில் அந்த நகை களவு போய்விட்டது. அது கேட்டு வருந்திய வள்ளல் "நகை களவு போன போது என்ன சொல்லி அழுதார் என்று கேட்டார்" என் நகை போன என்று அழுதார் என்றனர். "சாமி நகை போனதே என்று சொல் இருந்தால் சாமி காத்திருப்பார்" என்று பூடகமாகச் சொல்லி வள்ளல் சிரித்தார். அவர் நகை ஆசை போகச் செய்த திருவிளையாடலே இந்நிகழ்வு?
14.தொழுவூராரைக் கேளுங்கள்:
ஒருகால் தொழுவூரார் உடல் முழுவதும் கொப்புளங்கள் உண்டாயின தாங்கமுடியாமல் துன்புற்றார். அப்பொழுது வள்ளல் சித்திவளாகத்தில் இருந்தார். அங்கு சென்று வள்ளல் முன் பாடி பணிந்தார். திருநீறு வழங்கி அப்புண்களில் இட்டுப் பூசச்செய் அத்துன்பத்திலிருந்து அவரைக் காத்தனர் பெருமான். சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டு மேட்டுக்குப்பத்தில் பேருரை ஆற்றின நம்பெருமான் ஆத்ம விசாரணை செய்து கொண்டிருங்கள் என் கூறும் பொழுது தெரியாதவர்கள் தொழுவூராரைக் கேளுங்க மனுஷ்யதரத்தில் அவரும் விளக்குவார் என்று அருளின அதிலிருந்து சன்மார்க்க விளக்கம் உள்ளவராக அவர் இருந்த புலனாகின்றது. திருகாப்பிட்டுக்கொள்ளும் காலம் நெருங்கிய பெருமான் அன்பர்களை அழைத்தார். அவரவருக்கு உரிய பணிகள் ஒதுக்கப்பட்டன. சங்கத்துப் பணி அவருக்கு முன்பே இருந்த தற்பொழுது ஒரு பணியை இட்டனர் வள்ளல். அது அவர் சென்னை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே. வேண்டியதை அவ்வப்போ வழங்குவோம் என்று உறுதி அளித்து செல்லப் பணித்தருளினார்.
வடற்பெருவெளியில் இருந்த காலத்து சீரங்கம்மாளும், மகளும் இறந்து போயினர். திருநாகேசுவரன் என்னும் ஒரு மகனோடு! 30-1-1874-ல் சித்திவளாக திருவறையைப் பூட்டியபின் அன்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு சென்னை சென்றார் வேலாயுதனார்.
எதிர்பாராமல் வள்ளல் திருக்காப்பிட்டுக் கொண்ட நிகழ்வி நினைவு அவரை மிகவும் பாதித்திருந்தது. சில நாள்கள் எவருக்கு தெரியாமல் ஒருமுகப்பட்ட நினைவோடு இருந்தார். வள்ளல் மறைவு! நினைவு அவரை ஆட்கொண்டிருந்தது. அன்பர்கள் அவர்தம் இருப்பை அறிந்து கொண்டு சூழ்ந்தனர். சோமு செட்டியார் வீட்டு
சொற்பொழிவைத் தொடரச் செய்தனர். அவர் மகனுக்கும் படிக்க உதவினர். வள்ளற் பெருமான் தம் மாணவர் என்பதால் சான்றோர்கள் பலரும் வந்து அடுத்தனர். அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும் வந்து நின்றனர். பலரோடும் அளவாளவி வள்ளல் பற்றிய செய்திகளைக் கூறிகொண்டிருந்தார். மருட்பா இயக்கம் வலுபெற்றிருந்தது கண்டு விளக்கம் அளித்தார்.
15.நாத்திகரை வெல்லுதல்:
பூண்டி அரங்கநாதர் என்பவர் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்தார். அவரோடு பேசி வாதிட்டுக் கடவுள் உண்டென்பதை ஏற்கச் செய்தார். அதனால் அவரும் கச்சிக்கலம்பகம் பாடச்செய்தார். அவரும் மகிழ்ந்து பாடினார்.
16.கல்லூரிப் பேராசிரியர்:
1879 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்போராசிரியர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அப்பணியைப் பூண்டி அரங்கநாதர் தொழுவூரார்க்குக் கிடைக்கச் செய்தார். அதனால் முன்பு வெளியிட்டத் திருவருட்பா நான்கு திருமுறைகளை வெளியிட்டார். ஐந்தாம் திருமுறையும் வெளியானது. சன்மார்க்கப் பணிகளை ஆர்வம் குன்றாமல் செய்திட்டார்.
பிரம்மஞான சங்கம் சென்னையில் உருசிய நாட்டு பிளவட்சுகி அம்மையாரும் அமெரிக்க நாட்டுக் கர்னல் ஆல்காட் என்பவரும் பிரம்மஞான சங்கத்தை தொடங்கி இருந்தனர். அவர்கள் தொழுவூராரை அழைத்து வள்ளல் பெருமான் குறித்து விளக்க வேண்டினர். நீதிபதிகள் முன்னர் தொழுவூரார் சொன்ன செய்திகள் பதிவு செய்யப் பெற்றது. அது கேட்டு அச்சங்கத்தை தொடங்கச் செய்தவர்களுள் வள்ளற்பெருமான் ஒருவர் என்று உறுதி அளித்தனர். வள்ளற்பெருமான் கையெழுத்தைக் காட்டினர். தொழுவூரார் அது கண்டு வியந்தார் திருக்காப்பிட்டுக் கொண்ட பின் நிகழ்ந்த நிகழ்வு இது. எனவே பெருமான் எங்கும் இருப்போம் என்று திருவாய் மலர்ந்தது உறுதியானது.
நம்பிக்கையோடு மீண்டும் திருவருட்பா பதிப்புகளைச் செய்தார். ஆறாம் திருமுறை வெளியிடவே இல்லை. வள்ளல் உத்தரவுக்குக் காத்திருந்தார். கிடைக்கவே இல்லை. யார் சொல்லியும் அதனை பதிப்பிக்கவே இல்லை.
உரைநடை வளர்ச்சிக்கு மார்க்கண்டேய புராணம் ,திருவெண்காடர் புராணம் முதலிய அரிய நூல்களை எழுதினார். திருச்சந்நிதி முறையீடு என்று பெருமானைத் தோத்தரிக்கும் பாடல்களைப் பாடினார். வடற்பெருவெளிக்கும் வந்து வழிப்பட்டார்.
ஓய்வில்லாத பணியினால் உடல் நலிந்தது. உள்ளம் ஒன்றியே. பெருமான்பால் இருந்தது. வள்ளலை நினைந்து மகிழந்தது. 21-2-1889 ஆம் நாள் உயிர் அடக்கம் கொண்டது. திருஒற்றியூரில் அன்பர்கள் அவர் உடலை அடக்கம் செய்து வழிபட்டனர்.
தொழுவூரின் ஐயாவே போற்றி-வள்ளல்
சொல்கேட்டு நடந்தாயே போற்றி
மெழுகாக எரிந்தாயே போற்றி-அருட்பா
வெளியிட்டு மகிழ்ந்தாயே போற்றி!
No comments:
Post a Comment